Friday, February 14, 2014

காதலி

காதலி

ஒவ்வொரு பெண்ணும் அழகாவது,
ஒருவன் காதலி ஆகும் போது தான்;

ஒவ்வொரு ஆணும் கவிஞன் ஆவது,
ஒரு காதலியால் தான்

காதலி

அவள் சிணுங்கலை கேட்டுப்பார்,
குழந்தை கூட அவள் மழலையில் தோற்றுப் போகும்

அவள் மடியில் படுத்துப்பார்
தாயின் மடி கூட ஒரு நொடி மறந்து போகும்

அவள் அரை நொடி புன்னகைக்காக
பகல் முழுதும் காத்திருப்பாய்
அந்த சிரிப்பை நினைத்துக் கொண்டே
இரவெல்லாம் விழித்திருப்பாய்

சாய்வதற்கு தோளைத் தந்தால் உன்னிடம் மட்டுமே கண்ணீர் விடுவாள்

நெற்றி நிறைய முத்தம் தந்தால்
உனக்கு மட்டும் அழகாய் சிரிப்பாள்

பட்டாம்பூச்சியை சிறை பிடிப்பாய், அவள் கையில் விடுதலை பெறுவதற்காக

எறும்பைக் கூட கொலை செய்வாய் ,
அவளை கடித்த குற்றத்திற்காக

அலைகளும் உனக்கு நன்றி சொல்லும்,
அவள் ஸ்பரிசம் தொட அனுமதி தந்தால்

காற்றும் உனக்குள் இடம் கேட்கும்,
உன் சுவாசத்தில் அவளே வசிப்பதால்...

தோல்வியைக் கூட கொண்டாடுவாய்,
அவளுக்காக தோற்றுப் போனால்

கண்ணீரும் கூட இன்பமாகும்
அவளுக்காக அழும் போது

உயிரைக்கூட நீ வெறுப்பாய்
அவள் உன்னை வெறுக்கும் போது

சாவும் கூட பிடித்து போகும்,
அவளுக்காக நீ இறந்தால்.

காதலி

அவள் விதிகளுக்கு அப்பாற்பட்டவள்
புதிர்களுக்கு பழக்கப்பட்டவள்

சில நாட்கள் சிரிப்பை தந்து பின் பல நாட்கள் கண்ணீர் தருபவள்

கனவுகளை கண்ணில் தந்து விட்டு
நினைவுகளோடு நீங்கிச் செல்பவள்

காதலி

அவள்,
காதல் என்னும் மருந்தைத் தந்து - பின்
தனிமை என்னும் நோயைத் தருபவள்

Friday, July 1, 2011

மருத்துவன்

மருத்துவன் ,
கிருமிப் போரில் ஊசியை வில்லேற்றிய போராளி,
மனிதக்காற்றின் தூசியை அகற்றும் உயிர்வேலி

,   

மருத்துவன்,
பிணத்திற்கும் உயிர் கொடுக்கும் விந்தைக்காரன்,
கடவுள் இவனுக்கு தந்தைக்காரன்,

மருத்துவன்,
நூல்களை மட்டும் படிப்பவன் அல்ல, 
இதயங்களையும் படிப்பவன்,
சாவை எதிர்க்கும் யுக்தி தெரிந்தவன்,
வாழ்வை காக்க கத்தி எடுத்தவன்,

மருத்துவன்,.
எமனை எதிர்க்கும் அவன் இவன்,
சாதிகள் அறியா சமத்துவன்,
உலகின் நோய்க்கு மருந்திவன்.


Friday, March 12, 2010

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்



அம்மம்மா அழகம்மா,
அம்மா பேச்சு கேளம்மா ,
நிலை இல்லா உலகமம்மா,
ஓயாத கலகமம்மா.

பல கோடி நாள் கணக்கா,
கணக்கில்லாம பூமியம்மா
பெத்த பிள்ள அத்தனையும்,
ஒண்ணு  இல்ல ரெண்டு இல்ல,
கோடியிலும் கோடியம்மா.

கிழக்குதிச்ச சூரியன் என்றும் மேற்குலதான்  மறையுதம்மா,
ஆழி அது கரையைத்  தொட இல்லை வேறு முறையம்மா,
இமைப்பொழுதில் முகத்திரையை கிழித்திடுவான் மனிதனம்மா - இனி
இமை இரண்டும் துளிக்கைதியை தப்ப விட்ட சிறையம்மா.

மாடெல்லாம் 'ம்மா'வுன்னுதான் நாடெல்லாம் பேசுதம்மா ,
குப்பத்து காத்து தான் கோபுரத்துலயும் வீசுதம்மா..
வீசுற காத்தும்
பேசுற மொழியும்
எல்லாருக்கும் சமம்

இதைக் கூட அறியாதவன்
நடக்கத்தெரிந்த சவம்.

நதியம்மா மடியினிலே தவழ்ந்து வந்த பண்பாடு,
விதியம்மா சதியாலே  படுது இங்கே பெரும்பாடு,
நலிந்து போனது நாகரிகமம்மா,
மலிவாய் போனது மானுடமம்மா.


மத வெறியின் புது உருவா பிறந்தது தான் தீவிரவாதம்,
இது மனிதத்தையே ஊனமாக்கும் பக்கவாதம்,
தீவிரமா யோசிச்சா   தீவிரவாதமும் நம்மை தீண்டதம்மா,
உயிரை எல்லாம் நேசிச்சா  எந்த நோயும் அண்டாதம்மா.


அம்மம்மா அம்மாவையும் கற்பழிக்குறான் சிங்களனம்மா,
உதிரம் உதிர ஓலமிட்டாள் எங்கள் ஈழத்தம்மா ,
மனதுக்குள்ளே கண்ணீர்க் கோலமிட்டாள் தமிழம்மா..


பித்தம் பிடித்த  மனிதனைப் பார்த்து  சித்தம் கலங்கினான் புத்தனம்மா,
பேச வழி ஏதுமின்றி ஏசி முடித்தார் யேசுவம்மா,
அல்லா எனும் பெயராலே

பொல்லாதது எல்லாம் செய்து - என்னை

கொல்லாமல் கொன்றிவரோ  என்றஞ்சினார் அல்லாவம்மா.
நேசமும் பாசமும் இல்லாத மனிதனிடம் வெறியின்
வாசம்  மட்டும் கண்டார் ஈசனம்மா.

மனங்களை எண்ணாமல் மனிதத்தை புதைத்தானம்மா,
பிணங்களை மட்டும் எண்ணும் கணிதத்தை விதைத்தானம்மா,
உறக்கமின்றி உலகைக் கெடுத்த
இரக்கமற்ற மனிதனைக் கண்டு,
கடலம்மா விட்ட கண்ணீர் கரை தாண்டி ஓடுதம்மா,
புதைந்து போன மானுடம் எங்கேன்னு தேடுதம்மா,
பூமியம்மா துடிதுடிக்க நிலமெங்கும் ஆடுதம்மா.


ஆத்துல மட்டுமா வெண்தாமரை முளைக்குது?
சேத்துல கூட தான் செந்தாமரை முளைக்குது..
புத்தன் முதல் காந்தி வரை,
இயேசு முதல் அண்ணா வரை,
ஈனங்கெட்ட மனித இனத்தின்

மானங்காக்க வந்தவர்கள்
சொற்பத்திலும் சொற்பமம்மா..


ஆட்டுக்கும் சரி மாட்டுக்கும் சரி,
காந்திக்கும் சரி கோட்சேவுக்கும்  சரி,
பிறக்கும் வழியது ஒரு வழி தான்,
இறக்கும் வழியது விதி வழி தான்.


செய்யுற செயலும்
என்னுர எண்ணமும் தான்,
ஒருவனை புத்தனாக்குது,
ஒருவனை ஹிட்லர் ஆக்குது..


யாதும் ஊரம்மா,
யாவருன் கேளிரம்மா,
என்றும் இதை உன் சிந்தையில் பதியம்மா,
தாமதப் படுத்தாமல் செயலில் குதியம்மா..............



   



Monday, March 1, 2010

காதல் வலி

காதல் வலியைத்தரும்
வலிகள் வரியைத்தரும்,
வரிகள் கவிதை தரும்,
கவிதை காதல் தரும்.




.

Sunday, November 29, 2009

மின்வெட்டு

மின்வெட்டு தான் தலைப்பு,
சொல்லி முடித்தார் நடுவர்,
யாருக்கும் கேட்கவில்லை,
அரங்கில் மின்வெட்டு.

காவிரித்தாயின் கேள்வி

தவித்த வாய்க்கு தண்ணீர்  தரும் தமிழா,
தண்ணீர் என்னை வாய் தவிக்க விட்டது ஏனோ? 

Saturday, November 28, 2009

நான் சென்னை நகரம்
















நான்
சென்னை நகரம்,
தமிழ்த்தாயின் தலைப்புதல்வி
அவளோ அழகு மங்கலக்கோலத்தில்,
நானோ அறை குறை நிர்வாணத்தில்;

ஓசோன் படலத்தை உடைக்க துடிக்கும் கோபுரங்கள்,
அவை மறைத்திருக்கும் குடிசைகள் தான் என் மறுபுரங்கள்,
மெரினாவும் ஜார்ஜ் கோட்டையும் காட்டும் என் சரித்திரங்கள்,
கூவமும் அழுக்குக்குப்பமும் காட்டும் என் தரித்திரங்கள்;

குப்பைதொட்டிக்கு அருகில் கிழிந்த ஆடையுடன் பெண்,
ஸ்பென்சர் பிளாசாவுக்கு உள்ளேயும் கிழிந்த ஆடையுடன் பெண்,
அதுவோ இறைவன் விதித்த விதி,
இதுவோ நவநாகரிகத்தின் சதி















கடற்கரையை படுக்கையறையாக்கும் கலாச்சார புனிதர்கள்,
கருவறை முதல் கல்லறை வரை கழிவறையிலேயே வாழும் மனிதர்கள்;



















புத்தகப்பை
சுமக்கும் வயதில் கருப்பை சுமக்கும் சிறுமி,
மாஞ்சாக்கயிறு இழுக்கும் வயதில் கஞ்சா இழுக்கும் சிறுவன்;

கோவிலுக்கு அருகிலேயே விபசார விடுதிகள்,
கலவரம் என்று வந்தால் தெறிக்கும் குருதிகள்;

ஹீரோ ஆக இங்கே வந்து ஜீரோ ஆகும் அவலங்கள்,
நீரோ மன்னன் போல் எதையும் வேடிக்கை பார்க்கும் கேவலங்கள்;


கார்களிலும் டைடெல் பார்க்கிலும் பறக்கும் தமிழ்மகன்கள்,
பார்களிலும் டாஸ்மாக்கிலும் மிதக்கும் குடிமகன்கள்,
பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் அழகிய தமிழ்மகள்கள்,
கற்பை விற்கும் பதுமைப்பெண்ணாய் அங்கங்கே விலைமகள்கள்;

இயந்திரம் மனிதனாகும் முன்னே இங்கு மனிதன் இயந்திரம் ஆகிறான்,
சுதந்திரம் எதுவும் இன்றி இந்த வாழ்வே நிரந்தரம் ஆகிறான்;

வாசித்துப்பார்த்தால் நான் சிங்காரச்சென்னை,
யோசித்துப்பார்த்தால் நான் மனிதப்பண்ணை,

நான் தான் சென்னை நகரம்,
தமிழ்த்தாயின் தலைப்புதல்வி,
தமிழ்நாட்டின் தலை வலி...