Friday, March 12, 2010

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்



அம்மம்மா அழகம்மா,
அம்மா பேச்சு கேளம்மா ,
நிலை இல்லா உலகமம்மா,
ஓயாத கலகமம்மா.

பல கோடி நாள் கணக்கா,
கணக்கில்லாம பூமியம்மா
பெத்த பிள்ள அத்தனையும்,
ஒண்ணு  இல்ல ரெண்டு இல்ல,
கோடியிலும் கோடியம்மா.

கிழக்குதிச்ச சூரியன் என்றும் மேற்குலதான்  மறையுதம்மா,
ஆழி அது கரையைத்  தொட இல்லை வேறு முறையம்மா,
இமைப்பொழுதில் முகத்திரையை கிழித்திடுவான் மனிதனம்மா - இனி
இமை இரண்டும் துளிக்கைதியை தப்ப விட்ட சிறையம்மா.

மாடெல்லாம் 'ம்மா'வுன்னுதான் நாடெல்லாம் பேசுதம்மா ,
குப்பத்து காத்து தான் கோபுரத்துலயும் வீசுதம்மா..
வீசுற காத்தும்
பேசுற மொழியும்
எல்லாருக்கும் சமம்

இதைக் கூட அறியாதவன்
நடக்கத்தெரிந்த சவம்.

நதியம்மா மடியினிலே தவழ்ந்து வந்த பண்பாடு,
விதியம்மா சதியாலே  படுது இங்கே பெரும்பாடு,
நலிந்து போனது நாகரிகமம்மா,
மலிவாய் போனது மானுடமம்மா.


மத வெறியின் புது உருவா பிறந்தது தான் தீவிரவாதம்,
இது மனிதத்தையே ஊனமாக்கும் பக்கவாதம்,
தீவிரமா யோசிச்சா   தீவிரவாதமும் நம்மை தீண்டதம்மா,
உயிரை எல்லாம் நேசிச்சா  எந்த நோயும் அண்டாதம்மா.


அம்மம்மா அம்மாவையும் கற்பழிக்குறான் சிங்களனம்மா,
உதிரம் உதிர ஓலமிட்டாள் எங்கள் ஈழத்தம்மா ,
மனதுக்குள்ளே கண்ணீர்க் கோலமிட்டாள் தமிழம்மா..


பித்தம் பிடித்த  மனிதனைப் பார்த்து  சித்தம் கலங்கினான் புத்தனம்மா,
பேச வழி ஏதுமின்றி ஏசி முடித்தார் யேசுவம்மா,
அல்லா எனும் பெயராலே

பொல்லாதது எல்லாம் செய்து - என்னை

கொல்லாமல் கொன்றிவரோ  என்றஞ்சினார் அல்லாவம்மா.
நேசமும் பாசமும் இல்லாத மனிதனிடம் வெறியின்
வாசம்  மட்டும் கண்டார் ஈசனம்மா.

மனங்களை எண்ணாமல் மனிதத்தை புதைத்தானம்மா,
பிணங்களை மட்டும் எண்ணும் கணிதத்தை விதைத்தானம்மா,
உறக்கமின்றி உலகைக் கெடுத்த
இரக்கமற்ற மனிதனைக் கண்டு,
கடலம்மா விட்ட கண்ணீர் கரை தாண்டி ஓடுதம்மா,
புதைந்து போன மானுடம் எங்கேன்னு தேடுதம்மா,
பூமியம்மா துடிதுடிக்க நிலமெங்கும் ஆடுதம்மா.


ஆத்துல மட்டுமா வெண்தாமரை முளைக்குது?
சேத்துல கூட தான் செந்தாமரை முளைக்குது..
புத்தன் முதல் காந்தி வரை,
இயேசு முதல் அண்ணா வரை,
ஈனங்கெட்ட மனித இனத்தின்

மானங்காக்க வந்தவர்கள்
சொற்பத்திலும் சொற்பமம்மா..


ஆட்டுக்கும் சரி மாட்டுக்கும் சரி,
காந்திக்கும் சரி கோட்சேவுக்கும்  சரி,
பிறக்கும் வழியது ஒரு வழி தான்,
இறக்கும் வழியது விதி வழி தான்.


செய்யுற செயலும்
என்னுர எண்ணமும் தான்,
ஒருவனை புத்தனாக்குது,
ஒருவனை ஹிட்லர் ஆக்குது..


யாதும் ஊரம்மா,
யாவருன் கேளிரம்மா,
என்றும் இதை உன் சிந்தையில் பதியம்மா,
தாமதப் படுத்தாமல் செயலில் குதியம்மா..............



   



1 comment:

  1. சகோ நீண்ட நாட்களிற்குப்பின் நலம் தானே...
    அழகிய கவிதை
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete